பொட்டல்புதூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்லப்படுவதால் கனரக வாகனங்களின் அதிர்வை தாங்காமல் வீட்டின் சுவர் இடிந்திருக்கலாம்;
உயிரிழந்த இரண்டு வயது குழந்தை ஆதிரா
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழந்த விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பொட்டல் புதூர் அருகே உள்ள இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், இவருக்கு ஆதிரா என்ற மகள் மற்றும் மனைவியுடன் இந்திரா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணி வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மகள் ஆதிரா இடிபாடுகளுக்குள் சிக்கியது.
அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை ஆதிராவை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை ஆதிரா உயிரிழந்தது. அவர்கள் வசிக்கும் பகுதி வழியாக கனரக வாகனங்கள் மூலம், கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்லப்படுவதால், கனரக வாகனங்களின் அதிர்வை தாங்காமல் வீட்டின் சுவர் இடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தவிபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.