தாமிரபரணி ஆற்றங்கரையில் நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி
தாமிரபரணி ஆற்றங்கரையில் 12 வது நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தமிழ்நாடு அரசு வனத்துறை ஒருங்கிணைப்பில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவளக் காப்பு மையம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கைச் சங்கம் மற்றும் திருநெல்வேலி நெல்லை இயற்கைச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர்நிலைகளில் 12ஆவது பறவைகள் கணக்கெடுப்பு இன்று நடைபெற்றது. கணக்கெடுப்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த தன்னார்வலர்களுக்கு இணையம் மூலம் நேற்றுப் பயிற்சி வழங்கப்பட்டு இன்று மூன்று மாவட்டங்களிலும் உள்ள சுமார் 60 குளங்களிலும் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுற்றுச் சூழல் நிபுணர்கள் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
கடையம் பகுதியில் உள்ள அய்யம்பிள்ளை குளம், வாகைக்குளம் ஆகிய குளங்களிலும் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ரமேஷ் தலைமையில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை கூடுதலாக பெய்ததையடுத்து வாகைக்குளம், அய்யம்பிள்ளை குளம் ஆகிய குளங்களில் ஏராளமான பறவைகள் வந்து கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளன. பறவைகள் கணக்கெடுப்புப் பணி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதுகுறித்துக் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் கூறும்போது, பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம். நாள்தோறும் பறவைகளைப் பார்த்து வருகிறோம். அதில் வெள்ளையாக இருந்தால் கொக்கு, கருப்பாக இருந்தால் காகம் என்று மட்டும் நினைத்து கடந்துவிடுவோம். இன்று பறவைகள் குறித்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பின் இத்தனை வகையான பறவைகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டோம்.
ஒவ்வொரு பறவையும் அவற்றுக்கென தனித்தனி குணாதிசயங்களுடன் தனது இனத்தைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதொடு இயற்கையை காக்கும் பணியையும் செய்து வருகின்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள பல்வேறு வகையான பறவைகளை அதிகாலை நேரத்தில் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு கூழைகிடா, நாமக்கோழி, கானாங்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊல் அல்லிக்குருவி, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, பாம்புத் தாரா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கூடுகட்டியுள்ளன.பறவைகளைப் பாதுகாப்பதால் இயற்கையை பாதுகாக்கலாம் என்பதை தெரிந்து கொண்டோம் என்றனர்.
இரண்டு நாட்கள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பின் தொடர்ந்து பறவைகள் எண்ணிக்கைக் குறித்து தெரிவிக்கப்படும். பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளை மணிமுத்தாறு அகஸ்தியமலை மக்கள் சார் இயற்கைவளக் காப்பு மையம் ஒருங்கிணைப்பாளரும் மூத்த ஆய்வாளருமான மதிவாணன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் செய்துள்ளனர்.