ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஆலங்குளம் ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுகவில் குழப்பம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுகவில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சிக்கல் எழுந்துள்ளது.ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் 23 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர், 32 கிராம ஊராட்சி தலைவர் ,288 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 345 இடங்களுக்கான தேர்தல் நடந்தது.
இதில் 14 வார்டுகளில் திமுக,அதிமுக நேரடியாகவும்,3 இடங்களில் காங்கிரஸ் அதிமுக நேரடியாகவும், 4 இடத்தில் திமுக,பாஜக நேரடியாகவும்,1இடத்தில் மதிமுக,பாஜக நேரடியாகவும் போட்டியிடுகிறது.
11 வது வார்டில் அதிமுகவை எதிர்த்து ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிடுகிறார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு ஆலடி எழில்வாணன் போட்டியிடுவார் என மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனால் பல கூட்டங்களில் அறிமுகம் செய்து வைக்கபட்டார்.
இதற்காக திமுகவில் ஒரு தரப்பினர் தலைவர் பதவிக்கான பணிகளை தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த ஒருவருக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு மாவட்ட செயலாளர் முயற்சி செய்வதாக தகவல் திமுகவினரிடையே காட்டு தீயாய் பரவியது.
அதிலும் பொது வேட்பாளர்க்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக கட்சியில் சேர்ந்து சில மாதமே ஆன மருதபுரத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்மணியை வேட்பாளராக மாவட்ட செயலாளர் நிறுத்தியதை திமுக கட்சியினர் விரும்பவில்லை. மாவட்ட செயலாளர் இது போன்ற நடவடிக்கையால் ஆலங்குளம் ஒன்றிய 18 வது வார்டில் திமுக தரப்பில் போட்டியிட்ட ஆலடி எழில்வாணன் தரப்பில் உள்ள ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வருடமாக ஆலங்குளம் தொகுதியில் கட்சி பணி உட்பட பொதுமக்களுக்கு பல்வேறு நலதிட்டங்கள் என மும்மரமாக ஈடுபட்ட வந்த ஆலடி எழில்வாணன் மாவட்ட செயலாளரின் இந்த செயலை கட்சியின் மேலிடம் வரை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆலங்குளம் தொகுதி திமுக உட்கட்சி குழப்பத்தால் கட்சியினர் மாவட்ட செயலாளர் மீதுள்ள அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஊராட்சி ஒன்றிய தேர்தல் விஷயத்தில் மேலும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காங்கிரஸ் தரப்பிலும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடவதாக பரவலாக மக்களிடையே பேசபடுகிறது. இதனால் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக,காங்கிரஸ்,அதிமுக என மும்முனை போட்டி நடைபெறும் என்ற நிலையில் மாவட்ட செயலாளர் நடவடிக்கையால் நான்கு முனை போட்டியாக நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.