கடையத்தில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும் : அதிகாரிகள் தகவல்
கடையத்தில் கொள்முதல் செய்யப்படாத விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.;
தென்காசி மாவட்டம், கடையம் சந்தையில் அரசு கொள்முதல் செய்யாமல் முளை விட்ட நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடையம் சுற்றுப் புறங்களில் பிசான பருவத்தில் பயிர் செய்த நெல்லை சந்தையில் அமைக்கப்பட்ட தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக மார்ச் மாதம் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். நெல்லை கொள்முதல் செய்வதாகக் கூறிய அதிகாரிகள் சுமார் 50 நாள்கள் கடந்த நிலையில் மே முதல் வாரத்தில் நெல் தரமானதாக இல்லையெனக் கூறி கொள்முதல் செய்ய முடியாது எனத் தெரிவித்தனர்.
இது குறித்து உயரதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் புகாரளித்தனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பகுதி அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளைப் பார்வையிட்டார். அப்போது நாளை (இன்று) நெல் கொள்முதல் செய்யப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார்.