ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் காரணமாக 2 குழந்தைகள் பலி: ரத்த மாதிரி சேகரிப்பு
ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலியானது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் ரத்த மாதிரி சேகரிப்பு.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பஞ்சாயத்து காசிநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரு குழந்தையும், நேற்று ஒரு குழந்தையுமென 2 குழந்தைகள் இறந்துள்ளது. இதில் கூலி தொழிலாளிகளான சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா (வயது: 6) , பழனி என்பவரின் மகள் சுப்ரியா (வயது:8) ஆகிய 2 குழந்தைகள் பலியாகியுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்தனர். தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் தலைமையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தமாதிரிகள் சேகரித்தனர். தற்போது காய்சலால் மேலும் சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் தரப்பில் பஞ்சாயத்து சார்பில் விநியோகம் செய்யும் குடிதண்ணீர் சுகாதாரமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.