முறை தவறிய காதல் விவகாரம்: மனைவியின் வீட்டு முன் வீசப்பட்ட காதலன் தலை

முறை தவறிய காதல் விவகாரத்தில் மனைவியின் வீட்டு முன் காதலன் தலை வீசப்பட்டு உள்ளது.

Update: 2023-09-22 10:30 GMT

கொலை செய்யப்பட்ட முருகன்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கண்ணாடி குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் முருகன்(வயது42). இவர் கண்ணாடிகுளம் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும் மாடுகள் வளர்த்து மேய்த்து வருகிறார். தனது தோட்டத்தில் வழக்கம் போல் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் முருகனின் தலையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் முருகனின் தலையை தீவிரமாக தேடி வந்தனர்.இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி கிராமத்தில் இசக்கியம்மாள் என்பவரது வீட்டின் முன்னே அந்த மர்ம நபர் முருகனின் தலையை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.காவல்துறையினர்  தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் கண்ணாடிகுளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வேல்சாமி முருகனை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் வேல்சாமியை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில் கயத்தாறு டோல்கேட் அருகே இளநீர் வியாபாரம் செய்யும் வேல்சாமியின் மனைவியான இசக்கியம்மாளுக்கும் முருகனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த வேல்சாமி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வேல்சாமியும் இசக்கியம்மாளும் கண்ணாடிகுளத்தில் இருந்து கயத்தாறு பாரதி நகரில் குடியேறியுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட இசக்கியம்மாள் தனது தாய் வீடான ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு சென்று விட்டார்.

கைது செய்யப்பட்ட வேலுச்சாமி

இதனால் மனமடைந்து காணப்பட்ட வேல்சாமி தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வதற்கு காரணமான முருகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை முருகனின் தோட்டத்திற்கு சென்ற வேல்சாமி முருகனின் தலையை வெட்டி மனைவி இசக்கியம்மாளின் வீட்டின் முன்பு போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துமலை காவல்துறையினர் முருகனின் உடல் மற்றும் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான வேல்சாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முருகனுக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியின் வீட்டின் முன்பு போட்ட கணவனால் தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News