பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் தயாரிப்பு: 1.39 லட்சம் மதிப்பிலான பீடிகள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட 1.39 லட்சம் மதிப்பிலான போலி பீடிகள் பிடிபட்டன;
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பிரபலமான பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் தயாரிக்கப்படுவதாக வந்தத் தகவலையடுத்து தனியார் பீடி நிறுவன ஊழியர்கள் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடையம் அருகே உள்ள நெல்லையப்பபுரம் அருந்ததியர் காலனியில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டில் போலி பீடிகள் தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து அங்கு சென்று சோதனையிட்டதில் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பீடி பண்டல்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 1.39 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டகல்களையும் அங்கு இருந்த பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன் மகன் முப்புடாதி முத்து (42) என்பவரையும் கடையம் காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைத்தனர்.
மேலும் தனியார் பீடி நிறுவன ஊழியர் பழனிவேல் கொடுத்தப் புகாரின் பேரில் கடையம் போலீஸார் முப்புடாதி முத்து மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்ற நடுப்பூலாங்குளத்தைச் சேர்ந்த துரைச்சாமி மகன் வேல்முருகன் (45) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் விசாரணை செய்து வருகிறார்.