தென்காசி அருகே உலக சாதனை நிகழ்த்திய அரசு பள்ளி மாணவ- மாணவிகள்

தென்காசி அருகே வீர கேரளம் புதூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் உலக சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

Update: 2022-11-17 07:57 GMT

உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி. அந்த வகையில் மாணவச் செல்வங்களுக்கு இளமையிலேயே பல்வேறு திறமைகள் இருப்பதை கண்டறியவேண்டும். இதனை வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து தங்கள திறமைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இதற்கென்று தனியாக பணம் கட்டி பயிற்சி பெறுவது உண்டு.

ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அது போன்று தனியாக பயிற்சி எடுப்பது இயலாத காரியம். சில நேரங்களில் அரசு பள்ளியின் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களே பல்வேறு உதவிகளை செய்து அவர்களது திறமைகளை மேம்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஒரு நிகழ்வு தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் அரசு பள்ளியில் நடந்துள்ளது. அங்குள்ள மாணவர்களின் திறமைகளை கண்டறிந்த ஆசிரியர் ஒருவர் அவர்கள் சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டு அதனை நிகழ்த்தியும் உள்ளார். அது என்ன சாதனை என்பதை பார்ப்போமா?

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகபணிபுரிந்து வருபவர் மாலதி. இவர்  உலக சாதனை படைக்க கடந்த 4 மாதங்களாக சில மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தின் தனிமங்களின் பெயர்களை ஒப்பிக்க பயிற்சி அளித்தார். தனிமங்களின் பெயர்களை கூறிக்கொண்டே சிலம்பம் சுற்றுதல், செல்போனில் வீடியோ எடிட் செய்தல், ரோபோட்டிக் கார் செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளிக்கு வந்து, மாணவ, மாணவிகளின் மேற்கண்ட சாதனையை பதிவு செய்தனர்.

கர்ணா என்ற 8-ம் வகுப்பு மாணவர் கழற்றிய நிலையில் உள்ள ரோபோட்டிக் காரை மீண்டும் இணைத்தபடி தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களையும் 55 விநாடிகளில் ஒப்பித்தார். 60 சதவீத அறிவுசார் மாற்றுத் திறனாளியான சைபுல் இஸ்லாம் என்ற 8-ம் வகுப்பு மாணவர் தனிம அட்டவணை வரிசையில் உள்ள 20 தனிமங்களை 25 விநாடிகளில் ஒப்பித்துள்ளார்.

மகேஸ்வரி என்ற 8-ம் வகுப்பு மாணவி செல்போனில் காணொலியை எடிட் செய்தவாறு தனிம அட்டவணை வரிசையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 45 விநாடிகளிலும், சக்தி பிரபா என்ற 8-ம் வகுப்பு மாணவி சிலம்பம் சுற்றியவாறே 118 தனிமங்களை 50 விநாடிகளிலும் ஒப்பித்துள்ளனர். இவர்களின் உலக சாதனை முயற்சியை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், மண்டலத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்தனர்.

அரசு பள்ளி மாணவ மாணவிகளின் இந்த சாதனையை சக மாணவர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News