கடையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம்: யூனியன் சேர்மன் திறந்து வைப்பு
கடையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை அமைப்பு யூனியன் சேர்மன் திறந்து வைத்தார்.;
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக பல போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தினர். இதனிடையே கடையம் விளைநில பகுதிக்கு சம்பந்தமே இல்லாத கானாவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கீழக்கடையம் பஞ்.தலைவர் பூமிநாத் தலைமையில் விவசாயிகள் கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தை முற்றைகையிட்டு போராட்டம் நடத்தினர். நெல் கொள்முதல் நிலையம் கடையத்தில் அமைக்கப்படாதபட்சத்தில் ரோட்டில் நெல்லைக்கொட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. அதன்பேரில் கடையத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமை வகித்தார். கடையம் ஒன்றிய பஞ். தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ராமகிருஷ்ணன், மதிமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் வட்டார விவசாய சங்க தலைவர் பச்சதுண்டு பாலு வரவேற்றார். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகன் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் கணேசன், அரிமா சங்க நிர்வாகி கோபால், விவசாயிகள் ராமசாமி, வெள்ளபாண்டி, ஜெயராஜ், முத்துராமன், ஞானதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.