கடையநல்லூர் அருகே இலவச முழு உடல் பரிசோதனை முகாம்
கடையநல்லூர் அருகே இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறையில் சோகோ மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிராமப்புற மக்களுக்கு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள கோவிந்தபேரியில் சோகோ நிறுவனத்தின் கலைவாணி கல்வி மையம், சுகம் ஹெல்த் கேர் மூலமாக முழு உடல் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். கலைவாணி கல்வி மையம் முதல்வர் அக்ஷயா வரவேற்றார். இதில் கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து சோகோ ஐடி நிறுவனரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழு உறுப்பினருமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு முகாமை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அனைவருக்கும் அடிப்படை கல்வியும் மருத்துவம் கிடைக்க வேண்டும். நமது மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஈடான ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இஸ்டோனியா என்னும் நாட்டிலும் 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
அந்த நாட்டில் அனைவருக்கும் கல்வியிலும், சுகாதாரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்து உலக நாடுகளுக்கு முன்னோடியாக முதன்மை நாடாக திகழ்வது போல நமது தென்காசி மாவட்டமும் அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதல் மாவட்டமாக மாற நான் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கு முக்கியமாக கல்வித்துறைக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பேசினார்.