கடையம் ராமநதி அணை நீரோடையில் திடீர் காட்டாற்று வெள்ளம்: சிக்கிய 3 பேர் மீட்பு
கடையம் ராமநதி அணை நீரோடையில் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டனர்.;
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அணையின் மேல் பகுதியான நீரோடை பகுதிக்கு சென்று குளித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் ராமநதி அணைக்கு தண்ணீர் வரும் நீரோடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஆற்றின் மறுபக்கம் குளித்துக் கொண்டிருந்த தென்காசி அடுத்த கண்டமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார் (25), மாரியப்பன் (22), அரவிந்த் (25) ஆகிய மூன்று பேர் வெள்ளத்தில் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கடையம் போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இறங்கி கயிறு மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.