கடையம் : அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்

தென்காசி மாவட்டம் கடையத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த கனிமவள கனரக லாரிகளை பிடித்து அபராதம் விதித்தனர்;

Update: 2022-04-06 04:28 GMT

கடையத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த கனிமவள கனரக லாரிகளை பிடித்து அபராதம் விதித்த காவல்துறையினர்

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் சுமார் 6000 டன்னுக்கு அதிகமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகளால் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கனிமவளங்கள் கொள்ளை போவதோடு மட்டுமல்லாமல், மக்கள் நிதியில் அமைக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சாலைகள் கடுமையாக சேதமடைகிறது.

மேலும் சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் ஆங்காங்கே சேதமடைந்து பல இடங்களில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வீணாக சாலைகளிலும், கழிவுநீர் ஓடைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது. இது தவிர கனிமவளங்கள் அளவுக்கு மீறி கொள்ளையடித்துச் செல்லப்படுவதால் கடையம் ஒன்றியத்தில் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பனை வாழ்வியல் இயக்கம் உள்ளிட்ட இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

கடையம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் தடைசெய்ய வேண்டும். உள்மாவட்ட தேவைகளுக்கு தவிர அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை தாரை வார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அடுத்தகட்டமாக மக்களை திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள புளியரை வாகன சோதனை சாவடியில் கனிமவள லாரிகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டம் நடத்தவும் மக்கள் நல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் கடையம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவலர்கள் ராஜாதனஞ்செயன், சந்திரன், கதிர் ஆகியோர் திடீர் வாகன சோதனை நடத்தி கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளை பிடித்து தலா ரூ.3000 வீதம் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் தாறுமாறாக கொள்ளை போவதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் மவுனம் காத்து வரும் நிலையில் கடையம் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News