மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கிய கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.அவரைக் காப்பாற்றும் நோக்கில் வேகமாக வந்த போது மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயல்வெளியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய விவசாயியைக் காப்பாற்ற சென்ற பக்கத்து வயலை சேர்ந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மின் வேலியில் சிக்கிய விவசாயி படு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் (47). நெல், கத்தரிக்காய் போன்ற பயிர்களை காட்டு பன்றி , மான்கள் நாசம் செய்வதை தடுக்க
தனது வயலுக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரவில் மின் இணைப்பை கொடுத்துவிட்டு காலையில் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம். அதன்படி இன்று காலையில் மின் இணைப்பை துண்டிப்பதற்காக சென்ற விவசாயி கனகராஜ் தடுமாறி விழுந்ததில் மின்வேலியில் சிக்கி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் விவசாய பணி செய்து கொண்டிருந்த மற்றொரு விவசாயி முத்துராஜ் (37)அவரைக் காப்பாற்றும் நோக்கில் வேகமாக வந்த போது மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கனகராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலங்குளம் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயி மின்வெளியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.