தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா, சுரண்டை பகுதியில் கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ், ஆர்ஐ மாரியப்பன், விஏஓக்கள் வெள்ளைப்பாண்டி, கருப்பசாமி, கிராம உதவியாளர்கள் பரமசிவபாண்டியன், ஜேம்ஸ் ஆகியோர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு செய்தனர்.
மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், முகக் கவசம் இன்றி வருபவர்களுக்கு எந்த பொருட்களும் வழங்க வேண்டாம் எனவும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் எனவும், பிரதி வாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காய்கறி வியாபார சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் விளக்கினர்.
காய்கறி மார்க்கெட்டின் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் கனி, பொருளாளர் அண்ணாமலைக்கனி மற்றும் நிர்வாகிகள் ஜெயபால், தெய்வேந்திரன், சேர்மசெல்வம், சௌந்தர், கணேசன் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் முக கவசம் அணியாமல் உள்ளே வர அனுமதி இல்லை எனும் வாசகங்கள் அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டது.