கீழப்பாவூர் ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வான உறுப்பினர்களுக்கு சான்றிதழ்
கீழப்பாவூர் ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வான 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கீழப்பாவூர் ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட 21 கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்.6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், அரியப்புரம், குணராமநல்லூர், இடையர்தவணை, இனாம் வெள்ளகால், கழுநீர் குளம், மேல கிருஷ்ணபேரி, ஆகிய ஊராட்சிகளில் தலா ஒருவர், கீழ வெள்ளகால், நாகல்குளம், ராஜபாண்டி ஊராட்சிகளில் தலா இருவர், பெத்தநாடார்பட்டி, சிவநாடானூர் ஊராட்சிகளில் தலா 3 பேர் என 18 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகையா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஷீலா சான்றிதழ்களை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சண்முக சுந்தரம், துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.