கடையம் அருகே முன்விரோதம் காரணமாக செங்கல் சூளை தொழிலாளி குத்திக்கொலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முன்விரோதம் காரணமாக செங்கல் சூளை தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி மயிலப்பபுரத்தைச் சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (25). செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முப்பிலி மகன் துரை (23), டேனியல் ஆபிரகாம் மகன் சாம்பிளஸ்ஸன் (19) ஆகியோருக்கும் திருமண நிகழ்ச்சிக்கு பிளக்ஸ் போர்டு வைத்ததில் ஏற்பட்ட தகராறில் ஏற்கனவே ஓராண்டாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அந்தப் பகுதியில் உள்ள அவ்வையார் கோயிலில் பொங்கலையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அந்தப் பூஜைக்கு மணிகண்டன் சென்றிருந்தார். அப்போது அங்கு துரையும், சாம்பிளஸ்ஸனும் வந்த போது, துரையின் சட்டையைப் பிடித்து இழுத்த மணிகண்டன், நீ எப்படி கோயில் நிகழ்ச்சிக்கு வரலாம் என்று கேட்டதாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் கைகலப்பு ஏற்படவே, ஊர் மக்கள் இருவரையும் விலக்கி விட்டதோடு, மணிகண்டனை அவரது சித்தப்பா ஆறுமுகத்தின் வீட்டில் அடைத்து வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் துரையும், சாம்பிளஸ்ஸனும் மணிகண்டனை தேடி அவரது சித்தப்பா வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். உடனே சாம்பிளஸ்ன் அவரை பிடித்துக் கொள்ள, அவரை துரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துரையும், சாம்பிளஸ்ஸனும் தப்பியோடி விட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், எஸ்.ஐ. ஜெயராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரவி மற்றும் போலீசார், மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய துரை, சாம்பிளக்சன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் ரகுராஜன் இன்று காலை கைது செய்தார்.
கடையம் அருகே செங்கல்சூளை தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.