கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் பரபரப்பு

கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையால் பரபரப்பு நிலவியது

Update: 2021-10-30 05:45 GMT

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி செல்லும் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . இந்த அலுவலகத்தில் நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட திருமண பதிவு, சங்கம் பதிவு மற்றும் வீட்டு மனைகளின் பத்திரப்பதிவு, அடமான பதிவு என பதியப்பட்டு வருகிறது.

இங்கு பதியப்படும் ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவளி வசூல் நடைபெறுவதாகவும், சார் பதிவாளர் மோகன் தாஸ் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி வளைத்து ஊழியர்கள், ஊழியர் அல்லாத பொதுமக்களையும் தங்களது விசாரணை  வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி எஸ்கால் தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ராபின்சன் ஞானசிங் உள்பட 7 பேர் துருவி துருவி விசாரித்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 1.51லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர் மோகன்தாஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதித்துள்ளனர். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News