ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி அம்பாள் வசந்த உற்சவ திருவிழா
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் வசந்த உற்சவ திருவிழா கீழாம்பூரில் பட்டிணபிரவேசத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.;
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் வசந்த உற்சவ திருவிழா கீழாம்பூரில் பட்டிணபிரவேசத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
தென்காசி மாவட்டத்தில் அத்திரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவசைலத்தில் அருள் தரும் பரமகல்யாணி அம்பாள் சமேத அருள்மிகு சிவசைலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்த இத்திருத்தலத்தில் மூலவர் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். பாண்டிய மன்னனுக்கு ஜடாமுடியுடன் தரிசனம் காட்டி திருவிளையாடல் நடைபெற்ற இடம். சிவசைலம் அருகே உள்ள கீழ ஆம்பூரில் அசரீரி வாக்குப்படி கிராமத்தின் நடுவில் உள்ள கிணற்றில் நான்கு கைகளுடன் அம்மன் கண்டெடுக்கப்பட்டு இங்கு தன் நாதருடன் கோவில் கொண்டுள்ளார். ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் கீழஆம்பூரில் கண்டெடுக்கப்பட்டதால் இவ்வூர் அம்பாளின் பிறந்த வீடானது. திருமணத்துக்குப்பின் மறுவீடு காண்பது என்பது தமிழா் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு நிகழ்வு .
அதனை ஞாபகப்படுத்தும் வண்ணமாக ஒவ்வொரு ஆண்டும் சிவசைலநாதர் தேர் திருவிழா முடிந்ததும் பரமகல்யாணி அம்பாளையும் சிவசைலநாதரையும் கீழ ஆம்பூருக்கு அழைத்து வந்து 3 தினங்கள் வசந்த உற்சவமாக நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று காலை சிவசைலத்தில் இருந்து சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழ ஆம்பூர் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆம்பூர் வடக்கு கிராம நுழைவு வாயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அம்பாள் கண்டெடுத்த கிணறு முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் பெண் மாப்பிள்ளை வரவேற்க வீதிகள் முழுக்க பந்தல் வீடுகள்தோறும் மாக்கோலங்கள் போட்டு ஒவ்வொரு வீட்டினரும் ஆரத்தி எடுத்து சுவாமி அம்பாள் பட்டிண பிரவேசத்தை நடத்தினர். சுவாமி அம்பாள் முன்னே நாதஸ்வரம் ஒலிக்க பின்னே வேதமந்திரங்கள் முழங்க ஊர்மக்கள் பஜனை பாடல்கள் பாடியபடி கோலாட்டம் அடித்து பட்டிணப்பிரவேசத்தை சிறப்பாக நடத்தினர்