ஆலங்குளம் - துத்திக்குளம் இணைப்புச் சாலை பாலம் திறப்பு..!

ஆலங்குளம் - துத்திக்குளம் இணைப்புச் சாலையில் உள்ள புதிய பாலத்தை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்தார்.

Update: 2024-06-24 10:14 GMT

 புதிய பாலத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்த போது எடுத்த படம்

ஆலங்குளம் பேரூராட்சி 2வது வார்டு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துத்திக்குளம் சாலையில் ஜோதிநகர்,ரேனியஸ் நகர் இணைப்பு சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஆலங்குளம் பேரூர் திமுக செயலாளர் நெல்சன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி அன்பழகன் வரவேற்று பேசினார்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் மட்டும் பல கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தலைநகராகவும், விரைவில் நகராட்சியாக தரம் உயர்தப்படவுள்ள இப்பேரூராட்சியில்கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப்பணி, ரூ.11.40 கோடியில் மகளிர் அரசு கலைக்கல்லூரியில் புதிய கட்டிடப்பணி, ரூ.3.35 கோடியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து காவல்நிலையம் வரை நான்கு வழிச்சாலையில் தடுப்புச்சுவர், ரூ.2 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடப்பணி, ரூ.2 கோடியில் புதுப்பட்டி சாலைப்பணி, ரூ.1.50 கோடியில் மின் மயானம், ரூ.1.50 கோடியில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடப்பணி, ரூ.1.20 கோடியில் வேளாண்மைத்துறை பல்நோக்கு கட்டிடப்பணி,10வது வார்டில் ரூ.80 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைப்பணி, ரூ.22 லட்சத்தில் நூலக கட்டிட புதுப்பிப்பு பணி போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர ஆலங்குளம் பேரூராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், தனியாக கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட ரூ. 40 கோடியும், புதிய பேரூராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டிட ரூ.2 கோடியும், ஆலங்குளம் பேருந்து நிலைய பணிகளுக்கு ரூ.4.50 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் பல்வேறு பணிகளும் ஆர்.டி.ஓ. அலுவலகம், தீயணைப்பு நிலைய கட்டிட பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் ரேனிஸ் நகர் செயலாளர் துரை நன்றி கூறினார்.

Tags:    

Similar News