காதல் திருமணம் செய்த பெண் படுகொலை: தந்தை கைது
ஆலங்குளம் அருகே காதல் திருமணம் செய்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த தந்தை கைது.;
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி ஆர்.சி.கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி மகன் மாரிமுத்து (45). இவரது மகள் ஷாலோம் ஷீபா(19). அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் (22). கூலித்தொழிலாளி. முத்துராஜ்க்கும் ஷீபாவுக்கும் இடையே 2 வருடமாக காதல் இருந்துள்ளது. இதற்கு ஷீபா வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துள்ளனர்.
ஒரே ஊரில் அடுத்து அடுத்த தெருவில் இருந்தாலும் பெற்றோரின் கோபத்தால் தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் ஷீபா இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்ற தம்பதியர் அதிகாலை சாமக்கொடை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோவில் சென்று வரும் வழியில் தனது தந்தை வீடு இருந்ததால் அங்கு செல்வதாக கூறி ஷீபா சென்றுள்ளார்.. காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து வீட்டிற்குள் மகளை வீடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே தனது மகளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷீபாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷீபா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துமலை இன்ஸ்பக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து மகளை வெட்டி படுகொலை செய்த தந்தை மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.காதல் திருமணம் செய்த மகளை தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.