ஆலங்குளம் அருகே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்: பாேலீசார் அதிரடி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2021-10-04 04:31 GMT

ஆலங்குளம் அருகே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கலவரம் வராமல் தடுக்கும் பணியில் டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமையில் எஸ்ஐ தினேஷ் பாபு, ஏட்டுகள் லிங்கராஜா, பாலமுருகன் ஆகியோர் நேற்று காலை முதல் ஆலங்குளம் ஜோதி நகர், நல்லூர், அத்தியூத்து, பூலாங்குளம்,புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளின் அருகில் சாதாரண உடையில் நின்று கொண்டு அங்கே பெட்டி பெட்டியாகவும், சாக்குமூட்டையிலும் மது பாட்டில்கள் வாங்கி வருபவர்களை கண்காணித்தனர்.

இதில் 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 861 குவாட்டர், 24ஆப் பாட்டில்கள் சேர்த்து மொத்தம் 885 மதுபாட்டில் களும் அவர்கள் பயன்படுத்திய 13 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு மொத்தமாக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவித்திருந்தது. இந்நிலையில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தெரியவில்லை.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு டாஸ்மாக் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகிறது. ஆலங்குளத்தில் மதுவிலக்கு காவல் நிலையம் இருந்தும் இதுவரை ஒரு மதுபாட்டில்கள் கூட பறிமுதல் செய்யாத நிலையில் ஆலங்குளம் போலீசார் 885 மதுபாட்டில்கள் கடத்தியவர்களை பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News