கடையம் அருகே தனியார் விவசாயப் பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் மீட்பு
கடையம் அருகே கோவிந்தப்பேர் தனியார் பண்ணையில் இருந்த சுமார் 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கோவிந்தப்பேரியில் உள்ள தனியார் விவசாயப் பண்ணையில் ராஜநாகம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் செண்பகப்ரியா உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் (பொ) சரவணக்குமார் அறிவுரையின் பேரிலும் கடையம் வனவர் முருகசாமி தலைமையில் வனக்காவலர் வீரணன், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வேல்ராஜ், வேல்சாமி, மனோஜ்குமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் சென்று அங்கு பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட ராஜநாகம் கல்லாறு பீட் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
மேலும் இது போன்ற வன உயிரினங்களை மீட்பது குறித்தத் தகவலை கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு 04634-283165 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று துணை இயக்குநர் செண்பகப்ரியா தெரிவித்துள்ளார்.