ஆலங்குளத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உடையம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (52). விவசாயியான இவருக்கு வேல்மயில் என்ற மனைவியும் இசக்கியம்மாள், சிவனியம்மாள், மாரியம்மாள் ஆகிய மூன்று மகள்களும் முருகன்(22) என்ற மகனும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் முத்து, வேல்மயில், முருகன் மற்றும் முத்துவின் தாயார் சுடலியம்மாள் ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் முத்து தனது மனைவி மற்றும் தாயாரை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார். முருகன் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
முருகன் மாலை வீடு திரும்பும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதறி போன முருகன் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் முத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சுமார் 40 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்தில் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது. பட்டபகலில் விவசாயியின் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.