கனிம வள கொள்ளையை கண்டித்து ஆலங்குளத்தில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

கனிம வள கொள்ளையை கண்டித்து ஆலங்குளத்தில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-29 06:58 GMT

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி ஆலங்குளத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளத்தில் கனிம வள கொள்ளையை தடுக்கக்கோரி தே.மு.தி.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.

தென்காசி மாவட்டம் புளியரை பகுதி வழியாக மணல் ஜல்லி உள்பட கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆலங்குளத்தில் கேரளாவிற்கு செல்லும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரியும் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும் கல்குவாரிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஆலங்குளம் வேன் ஸ்டாண்ட் அருகே தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கேரளாவில் மலைகள் காப்பாற்றப்படுகின்றன ஆனால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை முழுவதும் கொள்ளயடித்து கொண்டு சென்று அங்கிருந்து மருத்துவ கழிவுகள் இறைச்சி கழிவுகள் எலக்ட்ரானிக் கழிவுகள் என கழிவுகளை கொட்டுகின்றனர்.  கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ஒவ்வொரு பகுதியிலும் தே.மு.தி.க.வினர் லாரிகளை மறிக்கும் நிலை ஏற்படும். செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர் வீட்டு வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகள் தாக்கப்பட்டதை தே.மு.தி.க. கண்டிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் லஞ்சம் அதிகரித்து விட்டது. சாலை பணிகளுக்கு 22% முதல் 30% வரை லஞ்சம் கேட்கப்படுகிறது.அதனால் தமிழகத்தில் தரமான சாலைகள் கேள்விக்குறியாகி உள்ளன.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Tags:    

Similar News