அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை: பெயர் சூட்ட கோரிக்கை

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலைக்கு அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஆதரிக்கும் கட்சியை ஆதரிப்போம் என அய்யா வழி பாலபிரஜாபதி அடிகளார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-30 15:43 GMT

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அய்யா வழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில், ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பாலபிரஜாபதி அடிகளார் கூறியதாவது,

அய்யா வைகுண்டரை சிறைப்பிடித்து திருவனந்தபுரத்திற்கு 100 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்நடையாய் கயிறு கட்டி அடித்து துன்புறுத்தி இழுத்துச்சென்றதாகவும், அத்தனை சோதனைகளையும் தாண்டி விடுதலை அடைந்து அதே சாலையில் மக்கள் ஆதரவுடன் சுவாமிதோப்பு திரும்பி வந்தார். எனவே அவர் நடந்து வந்த கேப்ரோடு என்னும்  திருவனந்தபுரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் தேசிய நெடுஞ்சாலை என பெயர் வைக்க வேண்டும். 12 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாகவும் இதற்கு 3 லட்சத்திற்கும் மேல் சாதி, சமய வேறுபாடின்றி கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே மத்திய அரசு இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இந்த கோரிக்கையை ஆதரிக்கும் கட்சியை மட்டுமே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஆதரிக்கவுள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags:    

Similar News