கோயில்களின் வரலாறு இணையத்தளத்தில் வெளியிடப்படும் : அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் வரலாறுகளும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்;
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் தலவரலாறு, தலபுராணம், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்தி, மின்னணு மயமாக்கி, பக்தர்கள் எளிமையாகப் பார்வையிடக் காட்சிப் படுத்தவும், அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவில் தலவரலாறு, தலபுராணம், சிற்றட்டைகள் உள்ள கோவில்களின் விபரத்தை அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் இல்லாத கோவில்களுக்கு தயார் செய்து அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக பெரியோர்களால் வெளியிடப்பட்ட அரியவகையான நூல்கள் மற்றும் கோவில் தொடர்பான நூல்கள், உள்பட அனைத்து நூல்களும் மறுபதிப்பு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துறையின் சார்பில் மாதந்தோறும் திருக்கோவில் திங்களிதழ் என்ற பெயரில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு கோவில் முக்கிய திருவிழாக்கள், கோயில் வரலாறு, கல்வெட்டுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. தலவரலாறு விவரங்கள் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை திட்டத்தின் பதிவேற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கோவில் வரலாறுகளையும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி துறை இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்