வரும் ஆகஸ்ட் 2 முதல் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர உத்தரவு
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் தினமும் பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவு
2021 - 2022ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கை பணிகளை அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுவான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து நிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக கடந்த காலங்களில் தலைமை ஆசிரியர் மற்றும் இவருக்கு உதவி புரிய ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு இடையே ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடு செயல்பாட்டை மேம்படுத்த வாட்ஸ்அப், டெலிகிராம், கூகுள்மீட், ஜீப் மீட் போன்ற இணைய வழிகளின் மூலம் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து நிலைகளிலும் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நாள் தோறும் பள்ளிக்கு வருகை புரிய, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக அறிவுரை வழங்க வேண்டும் என உதவி இயக்குனர் மற்றும் பள்ளிகல்வி ஆணையர் இணைந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் கோவிட் 19 பாதிப்பில் உள்ளோர் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர்கள் முறையான மருத்துவ ஆவணங்களை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தால் இதிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.