11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது
ஜூன் 3 வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11ம் மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், ஜூன் 3வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிகள் விரைந்து திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த முறை 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட பொழுது மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. ஆனால் இம்முறை தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.. மேலும் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்கிற விபரமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் சார்பில் செயல்முறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரே பிரிவிற்கு பலர் விண்ணப்பித்தால் அதற்காக 50 வினாக்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் புதிய கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்திலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று முதல் (ஜூன் 7) ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இவை அனைத்தும் ஜூன் 14 வரை அமலில் இருக்கும். தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு சரிந்து வருவதால், ஜூன் 14க்கு பின்னர் மேலும் தளர்வுகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், 11ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு ஜூன் 3வது வாரத்தில் இருந்து அப்போது கொரோனா பரவல் குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை தொடங்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.