போக்சோ வழக்குகளை கையாளும் முறை.. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை..
போக்சோ வழக்குகளை கையாளும் முறை குறித்து காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பில் இருந்தும் எழுந்தது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்ற போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த சட்டத்தின்படி, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். மேலும், அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிமுறைகள் உள்ளது.
இதுதவிர, குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக பேசுவது, குழந்தைகளை பாலியல் ரீதியான புகைப்படங்கள், வீடியோ எடுப்பது போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க போக்சோ சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தின் படி, போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு செய்யும் போது காவல் துறையினர் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு காவல் துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:
உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். அதன்படி, காவல் துறை அதிகாரிகள் அந்த அறிவுரைகளின் படி செயல்பட வேண்டும்.
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக, குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 41(4) இன் படி சம்மன் அனுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.
முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை) உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.