மீனவரின் வாரிசா நீங்கள்?.. இதோ உங்களுக்கான சிறப்பு சலுகை...தொடர்ந்து படியுங்கள்...
தமிழக மீனவர்களின் வாரிசாக இருந்தால் இலவச வழிகாட்டுதல் பயிற்சியில் சேரலாம் என கடலோர பாதுகாப்பு குழுமம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காக நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், மீனவர்களின் வாரிசுகளுக்கு வழிகாட்டும் வகையில் இலவச பயிற்சி ஒன்றை கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதுகுறித்து, தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கடற்படை மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு வழிகாட்டுதல் வகையில், சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் இலவசமாக நடத்தப்படுகிறது.
முதல்கட்டமாக 90 நாட்கள் கொண்ட இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது கட்ட இலவச பயிற்சி வகுப்பு நிகழாண்டில் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்பட உள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள தமிழக கடலோர மாவட்ட மீனவர் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை கடலோர மாவட்டங்களில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம், கடலோர பாதுகாப்பு குழும (மரைன்) காவல் ஆய்வாளர் அலுவலகங்கள், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக் கடைகள் ஆகிய இடங்களில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh?usp=sharing என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர் தேர்வு செய்யப்படுவோருக்கு தங்கும் இடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி பெறுவோருக்கு மூன்று மாதங்களுக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
எனவே, பிளஸ் 2 தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர்களிந் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.