தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்: கவர்னர் பேச்சு
தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி விருப்பம் தெரிவித்துள்ளார்
சென்னை பல்கலையின் 164வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், பட்டம் பெற்றவர்கள், குடும்பத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும். உலகின் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழின் புகழை தமிழகத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டிய காலம் வந்துள்ளது. தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்.
தமிழ், தமிழ் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவது தேவையான ஒன்றுதான். ஏராளமான இலக்கியச் செல்வங்கள் தமிழ் மொழியில் உள்ளன. முதல்வர் சட்டசபையில் அறிவித்தப்படி தமிழர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர். உலகின் பிற சமூகங்கள் இரும்பை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே நாம் இரும்பை பயன்படுத்தி உள்ளோம்.
கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும். தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன் என்று கூறினார்