சூரியனின் பயணம் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதே தமிழ் வருடப்பிறப்பு

சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதே தமிழ் வருடப்பிறப்பு சித்திரை மாத சிறப்புகள் பற்றி பார்க்கலாம்

Update: 2022-04-14 01:06 GMT

தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சித்திரை மாத சிறப்புகள்.

தமிழ் வருடப்பிறப்பு:

தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார் இந்த சுழற்சியே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். எனவே சூரியனின் பயணம் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் சஞ்சரிப்பதையே தமிழ் வருடப்பிறப்பு என மக்கள் கொண்டாடுகின்றனர். கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

சித்ரா பௌர்ணமி:

சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.அன்றைய நாளில் மக்கள் சித்திர குப்தனுக்காக விரதம் இருந்து, "எங்கள் பாவ கணக்கை குறைத்து, மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்க வழித் துணையாக இருப்பா" என்று வேண்டிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்திரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த மாதத்தில் வரக்கூடிய 'சித்ரா பெளர்ணமி'மிக விசேஷமானது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும், அது பூமி நாதம் என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

சித்திரை மாதம் என்றாலே மதுரை மக்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த மாதம் முழுவதும், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது எனப் பல விசேஷங்கள் உண்டு. மீனாட்சி திரு கல்யாணத்தைக் காண, அண்ணன் அழகர் சகலவிதமான ஏற்பாடுகளுடன் புறப்படுவார். தான் செல்வதற்கு முன்பே மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடந்துவிட்டது என்னும் தகவல் வைகைக் கரையை அடையும்போது, அவருக்கு வந்து சேரும். கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர், அப்படியே வண்டியூர் போய்விடுவார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வெளியூரில் இருந்து மக்கள் அலை அலையாக வருவர்.

அட்சய திருதியை:

அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாத எனப் பொருள்படும்.அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும். பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான்.

அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவுதானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள் அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.

லட்சுமி பூஜை:

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும். சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News