டெல்லியில் தமிழக ஆளுநர் ரவி அளிக்க போகும் விளக்கம்: கலக்கத்தில் தி.மு.க.

டெல்லியில் தமிழக ஆளுநர் ரவி அளிக்க போகும் விளக்கத்தால் தி.மு.க. அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Update: 2023-01-13 09:25 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழக சட்டசபையில் கடந்த ஒன்பதாம் தேதி நடந்த ஒரு நிகழ்வு இன்று தமிழக அரசியல் மட்டும் இல்லை டெல்லி அரசியலையும் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது. தி.மு.க. அரசின் சார்பில் அளிக்கப்பட்ட கவர்னர் உரையை படிக்காமல் தமிழக ஆளுநர் ரவி சில பகுதிகளை ஒதுக்கி வைத்ததும், அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் ,தான் சுயமாக சில வார்த்தைகளை சேர்த்து படித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் ஆளுநரின் உரையை தொடர்ந்து சபாநாயகர் அரசின் தமிழ் உரையை படிப்பதற்கு முன்பாகவே முதல்வர் மு. க. ஸ்டாலின் திடீர் என எழுந்து ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை முன்மொழிய இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறி சென்று விட்டார். ஆளுநர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக எழுந்து சென்றது மற்றும் அச்சிடப்பட்ட உரையை படிக்காமல் சுயமாக படித்தது ஆகியவை அவை மரபை மீறிய செயல்கள் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக மக்களையும், முதல்வரையும் மதிக்காத ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த வகையில் தமிழக அரசியல் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஆளுநர் ரவி உருவில்  சூடு பிடிக்க தொடங்கி விட்டது என்று தான் கூறவேண்டும்.

சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசக்கூடாது என உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளார். சட்ட மன்றத்தில் மரபை மீறி நடந்த கொண்ட ஆளுநர் ரவி மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதத்தை  ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தை தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து கொடுத்து உள்ளனர். சீலிடப்பட்ட கவருடன் கூடிய அந்த கடிதத்தில் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் அந்த கடிதத்தின் சாராம்சம் பற்றி டி.ஆர். பாலு எம்பி கூறுகையில்  அரசியல் சாசனத்தை மீறிய ஆளுநர் ரவி மீது என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதனை குடியரசு தலைவர் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் தான் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்று உள்ளார். டெல்லியில் அவர் ஜனாதிபதி திரெளபதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் அளிக்கபோவது தன்னிலை விளக்கமா அல்லது தான் எதற்காக அப்படி நடந்து கொண்டேன் என்பதையும் தாண்டி தி.மு.க. அரசின் குறிப்பாக சில அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை கூறப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் ஆளுநர் ரவி தமிழக கவர்னராக பதவி ஏற்ற பின்னர் தமிழக அரசு பற்றி இதுவரை 17 அறிக்கைகள் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அது உளவுத்துறை தொடர்பான அறிக்கைகள். இந்த தகவல் ஏற்கனவே தமிழக  அமைச்சர்களுக்கும் தெரியும். அதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்  ஒருவித கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News