திருச்சியில் 12 வது உலக தமிழ் மாநாடு நடத்த தமிழக அரசு கொள்கை முடிவு
World Tamil Conference -திருச்சியில் 12 வது உலக தமிழ் மாநாடு நடத்த தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
World Tamil Conference -திருச்சி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எம். ஏ.அலீம். பிரபல மூளை நரம்பியல் மருத்துவர் நிபுணரான இவர் திருச்சி மாவட்ட நலப்பணி நிதி குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தமிழக அரசின் போர்ட்டலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அதில் 11வது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து 12-வது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இதுவரை உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படவில்லை. ஆதலால் திருச்சியில் 'திராவிட பரிணாம வளர்ச்சியும், அறிவியல் தமிழும்' என்ற கருத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சர் அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர், டாக்டர் அலீமிற்கு பதில் மனு அளித்துள்ளார். அதில் உங்கள் கோரிக்கை மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு என கூறப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த கொள்கை முடிவிற்கு நன்றி தெரிவித்து டாக்டர் அலீம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2