தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது..
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை துணை வேந்தர் சுகுமார் தொடங்கி வைத்தார்.;
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, பொன்னேரி மீன்வள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகள் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளுக்கான வசதிகள் உள்ளன.
இதுதவிர, பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மீன்வளர்ப்பில் புதிதாக பல்வேறு தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் மாதம்தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அலங்கார மீன் வளர்ப்பு, இறான் மீன் கொழுக்க வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதுநிலை பட்ட படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் இன்று வெளியிடப்பட்டது. நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வேந்தர் சுகுமார் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட முதுநிலை படிப்புகள் மீன்வள அறிவியல் (13 பாடப்பிரிவுகள்), மீன்வளப் பொறியியல் (2 பாடப்பரிவுகள்), உயிர்தொழில்நுட்பவியல் (2 பாடப்பரிவுகள்), வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) மற்றும் ஒரு வருட முதுநிலை பட்டயப்படிப்புகள் (2 பாடப்பிரிவுகள்) ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 59 இடங்களும், முதுநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பில் 8 இடங்களும், முதுநிலை உயிர்தொழில்நுட்பவியலில் 5 இடங்களும் (சுயசார்பு), முதுநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள நிர்வாக மேலாண்மை) பட்டப்படிப்பில் (சுயசார்பு) 20 இடங்களும் மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பில் 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
அதுமட்டுமல்லாமல், முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 6 இடங்களும் மற்றும் வெளிநாட்டிவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்தப் பல்கலைக்கழத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளம் (www.tnjfu.ac.in) முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 04.12.2022 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தகுதித் தேர்வு மற்றும் நேரடி கலந்தாய்வானது 20.12.2022 மற்றும் 21.12.2022 ஆகிய தேதிகளில் சென்னை வாணியஞ்சாவடியில் உள்ள முதுநிலை மீன்வள பட்டப்படிப்பு நிலையத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தகவல்கள் மற்றும் விபரங்கள் அறிய பல்கலைக்கழகத்தின் தொலைபேசி (04365-256430) அல்லது செல்போன் எண் (9442601908) மூலமாக, அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தெரிவித்துள்ளார்.