ஜூன் 30-ல் தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஓய்வு: அடுத்தது யார்?

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஜூன் 30-ல் ஓய்வு பெறுகின்றனர்;

Update: 2023-05-17 11:54 GMT

டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரான இறையன்பு மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெறுகின்றனர். இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார். இவர் தற்போது தொழில் முதலீட்டு நிறுவனத்தில் (டிக்) கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா உள்ளார். மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

இவர்களது பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் 3 பேர் பெயர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும். அந்த வகையில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றவர். 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். பணியில் அனுபவம் வாய்ந்தவர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சிவ்தாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு ஸ்டாலின் முதலமைச்சரானதும் சிவ்தாஸ் மீனா தமிழக பணிக்கு திரும்பினார். தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.

தமிழக டி.ஜி.பி.யாக உள்ள சைலேந்திரபாபு ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெறும் நிலையில் அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரமிக்க இந்த பதவிக்கு சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் பெயர் அடிபடுகிறது.

புதிய டி.ஜி.பி.யை நியமிக்க 3 மாதங்களுக்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். அதில் மத்திய அரசு 3 பேர் பட்டியலை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும். அதில் ஒருவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார்.

அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.யாக வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

சீனியாரிட்டி அடிப்படையில் 1988-ம் வருட தமிழக பேட்ச் அதிகாரி சஞ்சய் அரோரா, 1990 பேட்ச் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் போலீஸ் கமிஷனர்) ஆபாஷ்குமார் சீனா அகர்வால் 1991 பேட்ச் அதிகாரி அமரேஷ் புஜாரி ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Tags:    

Similar News