அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்... டிசம்பர் 14 இல் பதவியேற்பு..
தமிழக முதல்வர் . ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்கிறார்.;
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞரணி செயலாளராக உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின்பேது, தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமைச்சர் பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை. ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி, மனிதன், கெத்து, நிமிர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான கலகத் தலைவன் என்ற திரைப்படம் வெளியாகிது.
இந்த நிலையில் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பேசும்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் மாமன்னன் படமே தனது கடைசி படம் என்றும் அதற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் வெளிப்படையாக உதயநிதி ஸ்டாலின் பேசி வந்தார்.
மேலும், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக மூத்த நிர்வாகிகள் வெளியிட்ட விளம்பரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். தமிழக மூத்த அமைச்சர்களும், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர்.
தமிழக அரசியலில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பதே கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி தமிழக அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பதவி ஏற்பு விழா டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறுவதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவில் தற்போது இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க எளிதாக இருக்கும் என்றும் அதை முன்வைத்தே அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் அமைச்சராகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள போதிலும், அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தத் துறை வழங்கப்படும் என்ற பேச்சு தற்போது தீவிரமாக உலா வருகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அல்லது சிறப்புத் திட்ட செயலாக்க துறை என இந்த இரண்டு துறைகளில் ஏதேனும் ஒரு துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஆளுநர் மாளிகையில் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மிகவும் எளிமையாக நடைபெறும் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் 40 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.