அன்புமணி ராமதாஸை உடனடியாக விடுதலை செய்ய தமிழ் பேரரசு கட்சி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் கௌதமன் வலியுறுத்தி உள்ளார்.;

Update: 2023-07-28 13:29 GMT

தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கௌதமன். (கோப்பு படம்).

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் சுரங்கம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கௌதமன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கௌதமன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

65 ஆண்டுகளுக்கும் மேலாக 35 கிராமங்களை முற்று முழுதாக சூறையாடி 96 ஆயிரம் ஏக்கர்களை என்.எல்.சி. என்கிற எமன் விழுங்கிய பிறகும் மீதமிருக்கும் கடலூர் மாவட்டத்தை அபகரிக்க துடிப்பதனை எதிர்த்து மண்ணுரிமை காக்க போராடிய பா.ம.க.வின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸை கைது செய்த தமிழ்நாடு அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் பெருமகான் பிறந்த கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி கிராமத்தை கடந்த இரண்டு நாட்களாக நெல்லின் கதிர் முற்றி வளைந்து கிடக்கும் ஈர நிலத்தை ஈவு இரக்கமின்றி கொடூர எந்திர மிருகங்களால் கொத்தி பிடுங்கி தூக்கி தூர எறிந்த நிகழ்வென்பது மனிதகுலம் ஏற்றுக் கொள்ள முடியாத குரூரம். இந்திய ஒன்றிய அரசுதான் தமிழின உரிமைகளையும் தமிழர் வளங்களையும் திட்டமிட்டு அழித்தொழிக்கிறதென்றால் அவர்களை எதிர்ப்பது போன்றே காட்டிக் கொண்டு அவர்களின் கணக்கற்ற அத்துமீறல்களுக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு அரணாக நிற்பதென்பது ஒரு மாபெரும் அரச வன்முறை.

சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிலக்கரி எடுக்கும் திட்டம் டெல்டாவிற்கு புகுத்தப்படுமானால் ஒரு டெல்டாகாரன் என்கிற முறையில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரகடனப்படுத்திவிட்டு கடலூரை சூறையாடும் போது மட்டும் காவல்துறையை அனுப்பி வேடிக்கை பார்ப்பதென்பது எத்தகைய அறம் என்பதனை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

இன்று காற்றில், அணுவில், அருவியில், கடலில், சூரிய வெப்பத்தில், ஏன் குப்பை கழிவுகளில் கூட மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் காலங்காலமாக எங்கள் தாய் தந்தை, மூதாதையரோடு நாங்கள் வாழ்ந்த எங்களின் வாழ்விடங்களையும் சோறிட்ட எங்களின் தாய் நிலங்களையும் அள்ளி அபகரித்துத்தான் மின்சாரம் தயாரிப்போம் என அடம் பிடிப்பது இனி ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல எங்களால் ஒருபோதும் அனுமதிக்கவும் முடியாது.

ஆகையினால் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடாமல் ஒரு மாபெரும் மக்கள் திரளோடு மண்ணுரிமை காக்க போராடிய அன்புமணி ராமதாஸையும் அவரோடு கைது செய்யப்பட்ட பா.ம.க.வினரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு இனி ஒரு சென்ட் கூட நிலமெடுக்காமல் நிரந்தரமாக என்.எல்.சி. என்கிற எமனை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து மத்திய மாநில அரசுகள் இருவருமாக இணைந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் மண்ணையும் மண்ணின் வளத்தையும் கொள்ளையடிக்கும் நிலை இதன் பிறகும் தொடருமேயானால் மிகக் காத்திரமான இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தினை உங்களால் தவிர்க்கவே முடியாது என்பதனை மத்திய, மாநில அதிகார வர்க்கங்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News