கையை வெட்டுவேன்: தி.க மாநாட்டில் டி ஆர் பாலு மிரட்டல்
தி.க தலைவர் கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் கையை வெட்டுவேன் என டி.ஆர்.பாலு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் .
சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் திராவிடர் கழகம் நடத்திய திறந்தவெளி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, யாராவது தனது தலைவரையோ, திக தலைவர் வீரமணியையோ சீண்டினாலோ தாக்க வந்தாலோ கையை வெட்டுவேன். கி.விரமணியால் திருப்பி அடிக்க முடியாது, ஏனென்றால் அவரிடம் பலம் இல்லை. என்னிடம் பலம் இருக்கிறது, அதனால் நிச்சயம் திருப்பி அடிப்பேன், வீரமணி மீது கை வைக்க முயன்றவரை வெட்டுவது என்னை பொறுத்தவரை தர்மம், நியாயம்.
நீங்கள் இல்லையெனலாம் அதை கோர்ட்டில் போய் சொல்லுங்க. 'நாவடக்கம் வேண்டும், இப்படி பேசுகிறேன்' என்று நாளை தானே சொல்லுவீங்க. இப்போ சொல்ல மாட்டீங்களே?' என டி.ஆர்.பாலு பேசினார். எதற்காக டி.ஆர்.பாலு இப்படி திடீரென உணர்ச்சிவசப்படுகிறார் என்பது புரியாமல் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் குழம்பினர்.
முன்னதாக தமிழர்களின் பாவம் பொல்லாதது. மீண்டும் பாஜகவால் வெற்றிபெற முடியாது எனவும் பாஜகவுக்கு சாபம் விடுத்த டி.ஆர். பாலு, சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பேசினார்.
தன்னை எல்லோரும் முரடன் என்கிறார்கள், ஆம் முரடன் தான், எங்கே தவறு நடக்கிறதோ அங்கே முரடனாக மாறுவேன் என பஞ்ச் டயலாக் அடித்தார்.
ஏற்கனவே அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் இருந்து வரும் முதல்வருக்கு டி.ஆர்.பாலு பேச்சு புது தலைவலியை உருவாக்கியுள்ளது.