ஓ.பி.எஸ் .மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

AIADMK Latest News in Tamil Today -அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இபிஎஸ்சுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-30 08:47 GMT

AIADMK Latest News in Tamil Today -அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரதுமறைவுக்கு பின்னர் கட்சியில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் தமிழக முதலமைச்சர் ஆனார். ஓ. பன்னீர்செல்வம் அவருக்கு ஆதரவு கொடுக்காமல் குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் தர்மயுத்தம் நடத்தினார்.


பின்னர் இந்த பிரச்சனை பற்றி பிரதமர் மோடி தலையிட்டு பிளவு பட்ட அ.தி.மு.க.வை ஒன்று படுத்தினார். அதன்படி அ.தி.மு.க.நிர்வாகக் குழுவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடி முன்னிலையில் சமாதானம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பு ஏற்றனர். சுமார் நான்கரை ஆண்டு காலம் இந்த நடைமுறைப்படி அ.தி.மு.க. ஆட்சி நடந்து முடிந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்து தோல்வியை தழுவியதால் மீண்டும் கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே நீரும் நெருப்பும் ஆக இருந்து வந்த கருத்து வேறுபாடு, பகை மீண்டும் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத்  தலைமை விவகாரத்தை கையில் எடுத்தனர். எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.  பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வகையில் ஒற்றைத் தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்ததால் மீண்டும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. இதற்காக கட்சியின் முன்னணி தலைவர்கள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓ.பன்னீசெல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பொதுக்குழு சட்டப்படி கூட்டப்படவில்லை. அந்த பொதுக்குழு செல்லாது என கூறியதோடு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அறிவித்தார். இப்படி இரு தரப்பினரும் இடையே ஏற்பட்ட மோதல் வளர்ந்து கொண்டே சென்றது.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் பொதுக்குழு தீர்ப்பு எதிராக தடை விதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. கட்சியில் ஜூன் மாதத்திற்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு விசாரித்து தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து.அவர் அளித்த தீர்ப்பு செல்லாது என தீர்ப்பு கூறினார்கள்.இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர். மேலும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.


இதற்கிடையில் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஒரு முக்கிய தீர்ப்பை அளித்தார். அந்த தீர்ப்பில் ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்திற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். வழக்கு  முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தீர்ப்பளித்து உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கு முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆனாலும்  வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகு பொதுக்குழு கூட்டத்தை நடத்தி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறினார்.



தற்போது உள்ள நிலவரப்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமியால் நடத்த முடியாது. இதன் காரணமாக அவர்  பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை அவர் தனது பொதுச்செயலாளர் பதவியை உறுதிபடுத்தப்பட முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.






அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News