தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதால் விலை திடீரென உயர்ந்துள்ளது.;
கடந்த சில நாட்களாக கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளது. காரணம் இரண்டு மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் 26 கிலோ மூட்டை அரிசியின் விலை, 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுதவிர, சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை திடீரென உயர்ந்துள்ளது.
மூட்டைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலை உயரும் என வணிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால் தற்போது உள்ள விலையை விட மேலும் கணிசமாக அரிசியின் விலை உயரும் என வணிகர்கள் கூறுகின்றனர். எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் அரிசி ஏற்றுமதியை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிசிக்கு இணையாக சமீப நாட்களாக பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ,பாசி பருப்பு போன்றவைகளின் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ பருப்பு 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது . தற்போது பருப்பு கிலோ 140 முதல் 145 ரூபாயாக உயர்ந்துள்ளது என வணிகர்கள் கூறுகின்றனர்.