பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.;
தமிழகத்தில் வருகிற மே மாதம் 5ம் தேதி பிளஸ் 2 அரசு பொது தேர்வும் 6-ம் தேதி பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதற்காக நாளை ரிவிஷன் தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
கொரோனா பரவல் பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு பள்ளிகளில் முறையாக பாடம் நடத்தப்படாததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு 70 சதவீதம் அளவிற்கு மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு உள்ளது. மீதி 30 சதவீத பாடங்கள் நடத்தப்படவில்லை. பாடம் நடத்தி முடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியின்போது அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என கூறியிருந்தார். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் மனதளவில் புழுங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பொங்கி எழுந்த மாணவர்கள் நேற்று மதியம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திருச்சியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து அமைச்சரை சந்திக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். அப்போது அமைச்சர் வெளியூர் சென்று வந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் இப்பொழுது கடைசி நேரத்தில் பாடம் நடத்தப்படாத 30 சதவீத பகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றால் நாங்கள் எப்படி படிப்பது ரிவிஷன் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் எப்படி எல்லா பாடத்தையும் படிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்கள்.
ஒரு கட்டத்தில் அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் அங்கு வந்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிட நேரம் நீடித்தது.
போலீஸ் தரப்பில் அமைச்சர் அலுவலகத்தை முற்றுகை இட வேண்டாம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுடன் நானே வருகிறேன் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருச்சியில் அமைச்சர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடம் நடத்தப்படாத 30 சதவீத பகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் இந்த விவகாரத்திற்கு அரசு விரைவில் முடிவு கட்டவேண்டும் என்பது மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்தாகவும் உள்ளது.