"விடுமுறையிலும் வகுப்பு நடக்குது" கலெக்டருக்கு ட்வீட் செய்த மாணவர்: எச்சரித்த கல்வித்துறை

திறக்கப்பட்டுள்ள தனியார் பள்ளியை உடனடியாக மூட உத்தரவு - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி

Update: 2021-12-27 08:56 GMT

தேர்வுகள் நடைபெறாத போதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, வரும் 31ஆம் தேதிவரை அரையாண்டுத் தேர்வு விடுமுறையாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்திருக்கிறது.

அரசு உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகள், விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரிவிசன் டெஸ்ட் உண்டு, எனவே வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுவது குறித்தும், அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு ஒரு மாணவர் நேற்று இரவு ட்வீட் செய்திருக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.

இந்த நிலையில் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும், திறக்கப்பட்டுள்ள தனியார் பள்ளியை உடனடியாக மூடவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News