'உடனடியாக பதவி விலக வேண்டும்' தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள்உடனடியாக பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;
தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் கடந்த 2ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று காலையும், துணை மேயர், துணைத் தலைவர் தேர்தல்கள் இன்று பிற்பகலிலும் நடைபெற்றன.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சில இடங்களை ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதன்படி கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இது தவிர கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு க, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என சில துணை மேயர் ,நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளையும் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க.வினர் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயந்தி என்பவர் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் சற்குணத்தை தோற்கடித்து தி.மு.க.வின் ரேணு பிரியா வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவி சி.பி.எம் .கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அக்கட்சியின் வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் மிரட்டி தி.மு.க.வின் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
இப்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க.வினர் உடனடியாக தாங்கள் வெற்றி பெற்ற பதவிகளில் இருந்து விலக வேண்டும் என தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு .க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அதிரடி உத்தரவு போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற தி.மு.க. நிர்வாகிகளிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.