சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணம் புறப்பட்டார் ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணத்திற்காக இன்று புறப்பட்டார்;
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நாடுகளில் அவர் மொத்தம் ௯ நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
வருகிற 2024 ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சர், அரசு உயர் அதிகாரிகளும் வருகிறார்கள். ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளோடு ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு முதலீட்டாளர்களை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்தும் பேசவிருக்கிறேன். ஒரு சில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்த பயணத்தினுடைய முக்கிய நோக்கம் என்பது வருகிற 2024 ஜனவரி மாதம் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதுதான். ஆகவே, அந்த நோக்கத்தோடுதான் செல்கிறேன்.
கடந்த முறை நான் மேற்கொண்ட துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 15,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில், தன் திட்டத்திற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணிகளை துவக்கிட தயாராக இருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய முதலீடுகள் எவ்வளவு என்றால், ஜூலை 2021 முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. 2,95,339 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும்போது, 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும். அந்த அடிப்படையில்தான், இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.