ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு;
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டு பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது.
தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 4.48 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு, அதிகாலை 4.48 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வைபவத்தையொட்டி பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நேற்று இரவு முதலே கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டை பெற்றவர்கள் கோவிலுக்குள் செல்வதற்காக அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைகள் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளிய பின்னர் அந்த வழியாக சென்று அவரை தரிசிப்பதற்காகவும், மூலவரை முத்தங்கி சேவையில் தரிசனம் செய்வதற்காகவும் கோவில் பிரகாரங்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்து இருந்தனர்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.