பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன.;

Update: 2024-01-12 04:28 GMT

 பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கம் (கோப்பு படம்)

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இருநாட்களே இருக்கின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகினர். இதையடுத்து, கடந்த 8ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர்.சிவசங்கர், பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம், 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திரா மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
  • புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்பட உள்ளது.
  • இதேபோல், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து சிறப்பு பேருந்துகளும் (அரசு விரைவு பேருந்துகள் நீங்கலாக) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
  • தாம்பரத்தில் இருந்து ஒரகடம் வழியாக காஞ்சீபுரம், வேலூர், ஆரணி செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
  • பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது.

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. அதாவது, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம், திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, செயங்கொண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்.

அரசு விரைவு பேருந்துகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோவை, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

இதனால், அரசு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து ஏற முன்பதிவு செய்த பயணிகளும் கிளாம்பாக்கத்துக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் உள்பட சிறப்பு பேருந்துகள் புறப்படும் 6 பேருந்து நிலையத்துக்கும் இன்று முதல் 450 சிறப்பு இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படுகின்றன.

இதேபோல், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்பி வரவும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 11,130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பிற ஊர்களுக்கு இடையே 6,459 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News