தொடர் தட்டுப்பாடு: 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்படுமோ?
தொடர் தட்டுப்பாடு காரணமாக 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.;
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில் பட்டனை அழுத்தினால் 500 ரூபாய் நோட்டுகள் தான் கத்தை கத்தையாக வருகின்றன.
அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒரு சில ஏ.டி.எம். இயந்திரத்தில் வேண்டுமானால் 2000 ரூபாய் நோட்டுகளை பார்க்க முடியும். அதே போல் தான் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலக நடவடிக்கைகளிலும், வங்கி நடவடிக்கைகளிலும் கூட 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
இப்படி தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் என்ன என்பதை மத்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் ஒரு ஐயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு பாரத பிரதமர் நரேந்திர மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பு. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ. 1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்பதே அந்த அறிவிப்பு. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரமே மிகப்பெரிய ஆட்டம் கண்டது. அன்று ஏற்பட்ட ஆட்டம், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மந்தம், குரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் அது விழுந்த இடத்திலிருந்து இன்னும் முழுமையாக எழுந்து நிற்க முடியவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதன் தொடர்ச்சியாக மக்கள் பட்ட கஷ்டத்திற்கு அளவே இல்லை. ஏ.டி.எம். மையத்திலும் வங்கி வாசலிலும் காத்து கிடந்துதான் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் பெற முடிந்தது. அப்படி அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் இப்போது திடீரென மாயமாகி போனதற்கு காரணம் என்ன? பொதுவாக நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் பொருளாதாரமும் வர்த்தகமும் வளரும். ஆனால் தற்போது காணமுடியாத ரூபாய் நோட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன .
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இரண்டு நிதி ஆண்டுகளாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று அரசு அறிவித்திருந்தது. இதுவும் மக்கள் மனதில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது என்ன சந்தேகம்? தொடர்ந்து தட்டுப்பாட்டிலுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திடீரென ஒருநாள் செல்லாது என அறிவிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு தான்.
ஏ.டி.எம். மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்பதால் சாதாரண மக்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். 2000 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம். மையத்தில் வந்தால் 20,000 ரூபாய் பணத்தை கூட 10 தாள்களாக அப்படியே மடித்து மேல் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு போய்விடலாம்.
ஆனால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுக்கள் என்றால் 40 நோட்டுக்களை வாங்கிக் கொண்டு பேண்ட் பாக்கெட்டில் வைக்கக் கூடிய சூழல் ஏற்படுகிறது. அதனால் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமல்ல எந்த நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பை திடீரென வெளியிட்டு விடாமல் மக்கள் எளிதாக கையாளக் கூடிய வகையில் 2000 ரூபாய் நோட்டுகளை போதுமான அளவில் தட்டுப்பாடு இன்றி வெளியிட ரிசர்வ் வங்கிக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொடர் தட்டுப்பாடு: 2000 ரூபாய் நோட்டு