சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை: 'வழி' காட்டுகிறது நெல்லை மாநகராட்சி

நெல்லையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் ரூபாய் 2 கோடியே 84 லட்சம் மதிப்பில். சுமார் 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளுக்கென தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-12-04 00:30 GMT

புகை, மாசு குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் வகையிலும்,  சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு நெல்லை மாநகரில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

வளர்ந்துவிட்ட நவீன உலகில் சைக்கிள் பயணம் என்பதே அரிதாகிவிட்டது. சைக்கிள் ஓட்டி பழகுவதை விட,  நேரடியாக பைக் ஓட்டவே இன்றைய தலைமுறையினர் ஆசைப்படுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சைக்கிளை ஓரம் கட்டிவிட்டு,  புகையை வெளியிடும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதால், சுற்றுசுசூழல் மாசு,  புகை, உடல் நலக்குறைவு, போக்குவரத்து நெருக்கடி, அதிவேக பயணத்தால் விபத்து, எரிபொருள் விலை ஏற்றத்தால் பொருளாதார பாதிப்பு போன்ற பாதகங்களை அதிகம் சந்திக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், நெல்லை  மாநகர மக்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாரம்தோறும் சைக்கிள் பயணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். அடுத்த முயற்சியாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மாநகர சாலைகளில் தனி வழி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இதன் தொடக்கமாக, மாநகராட்சி  27வது வார்டு பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில், சைக்கிளிஸ்ட் ட்ராக் அமைக்க திட்டமிடப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் ரூபாய் 2 கோடியே 84 லட்சம் மதிப்பில் சுமார் 1.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்பணிகள் நடந்துள்ளன.  இந்த சைக்கிள் பாதை மேடு, பள்ளம் இன்றி சமதளமாக இருக்கும் வகையில் பிளாஸ்டிக் கலவையுடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

குளத்து சாலை, நியூ காலனி, புதியகாலனி, விரிவாக்க சாலை, அன்னை கல்யாணம், மகால் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளன. இந்த சைக்கிள் பாதை மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இளம் பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதைக்குள் மற்ற வாகனங்கள் செல்வதை தவிர்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் சைக்கிளில் செல்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் சிறுவர்களும், முதியவர்களும் கூட பயமின்றி சீட் சாலைகளில் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியும்.

மேலும் காலை மாலை நேரங்களில் சைக்கிள் ஒட்டி உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். முன் முயற்சியாக இதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநகரின் மற்ற பகுதிகளிலும் அமைக்கத் திட்டம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி அலுவலக பணிகளுக்கு செல்பவர்களும் சைக்கிளை பயன்படுத்த இந்த சாலை தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Tags:    

Similar News