இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து செந்தில் முருகன் நீக்கப்பட்ட சில மணிநேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்பு செயலாளர் செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் சிலமணி நேரத்திற்கு முன்பு அறிவித்தார்.
இந்நிலையில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இரட்டை இலை யாருக்கு என்ற பிரச்சனை, வாக்காளர்களுக்கு வெள்ளி தட்டு, டம்ளர், சில்வர் குடம், ஸ்மார்ட் வாட்ச், தங்க காசு, பட்டு புடவை, கூப்பன் கார்டுகள் என வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினர். இந்த விஷயத்தில் மட்டும் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என தேர்தல் களத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில் முருகன், ஒரு சில நாட்களிலேயே வேட்புமனுவை திரும்ப பெற்றார். இதனால் இரட்டை இல்லை சின்னத்தில் பிரச்சனை இல்லாமல் தென்னரசு வேட்பாளராக களம் இறங்கினார்.
இருப்பினும் கிட்டத்தட்ட 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஓபிஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், இபிஎஸ் அணியில் இன்று இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.